×

பொதக்குடி-அகர பொதக்குடி இடையே அந்தரத்தில் தொங்கும் வெள்ளையாறு பாலம்: புதிதாக கட்ட கோரிக்கை

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகில் பொதக்குடி-அகர பொதக்குடி இடையே வெள்ளையாற்றில் ஆபத்தான நிலையில் இடிந்து தொங்கி கொண்டிருக்கும் பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி-அகர பொதக்குடி இடையே வெள்ளையாற்றில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சிமெண்ட் காங்கிரீட் கம்பி பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்லும். மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வது வழக்கம்.

இந்த பாலத்தின் மறுகரையில் உள்ளது அகர பொதக்குடி கிராமம். இங்கு சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இந்த பாலத்தின் வழியாக வந்து பொதக்குடியில் உள்ள கடைகளில் வீட்டிற்கு வேண்டிய பொருள்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் பள்ளிகள், வங்கிகள், அரசு மருத்துவமனை, அங்காடி உள்ளிட்ட பல்வேறு வகையான தேவைகளுக்கு இந்த பாலத்தின் வழியாகதான் சென்று வர வேண்டும். இங்கு நடை பெறும் சுபமுகூர்த்தங்களுக்கு கூட பொதக்குடியில் உள்ள மண்டபங்களில்தான் நடைபெறும். பிரசவம் மற்றும் அவசரத்திற்கு வாளாச்சேரி வழியாக 4 கிலோ மீட்டர் சுற்றிதான் பொதக்குடி வர வேண்டும்.இந்நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் இந்த கம்பி பாலத்தின் அடிப்பகுதியில் உள்ளிரும்பு கம்பிகள் துரு பிடித்து இருந்த நிலையில், ஆற்றில் அதிகம் தண்ணீர் வந்ததால் பாலம் இடிந்து தொங்கி கொண்டிருக்கிறது. தற்போது ஆற்றில் தண்ணீர் செல்வதால் பாலத்தில் மாணவர்கள், முதியவர்கள் கம்பியை பிடித்துக் கொண்டு அச்சத்தில் சென்று வருகின்றனர். பாலம் இடிந்து தொங்குவதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வாளாச்சேரி வழியாக சுற்றிதான் செல்கின்றனர். எனவே பாலத்தில் மக்கள் செல்லும் போது மிகப்பெரிய விபத்து ஏற்படும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இடத்தை நேரில் பார்வையிட்டு புதிய பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக ஒன்றிய செயலாளர் பழனிவேல் மற்றும் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : White Yaru ,Pothakudi ,Akara Pothakudi , White Yaru bridge hanging in the gap between Pothakudi-Akara Pothakudi: Request for new construction
× RELATED நீடாமங்கலம் அருகே மின்னொளியில் மின்னிய சந்தனக்கூடு ஊர்வலம்